சமயநல்லூர் அருகே வைரலாகும் வீடியோ வயல் வழியே பிணத்தை எடுத்துச் செல்லும் மக்கள்; மயானத்திற்கு பாதை தேவை

வாடிப்பட்டி, ஜன. 22: சமயநல்லூர் அருகே மயானத்துக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளியில் எடுத்து செல்லும் நிலை உள்ளது. எனவே, மயானத்திற்கு பாதை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வடக்கு தாலுகா சிறுவாலை ஊராட்சிக்குட்பட்டது செல்லகவுண்டம்பட்டி. இக்கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனியாக மயானம் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அமைத்து தரப்பட்ட இந்த மயானத்திற்கு போதிய பாதை வசதி இல்லை. மயானத்தை சுற்றி வயல்வெளியாக உள்ளது. விவசாயம் இல்லாத நேரத்தில் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல வதியா இருந்தது. ஆனால், மயானத்தை சுற்றி விவசாயம் நடைபெறும் போது உடல்களை எடுத்து சென்று தகனம் செய்வதில் இப்பகுதியினர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மயானத்திற்கு போதிய பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அதிமுக அரசிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் தந்தை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலை உறவினர்கள் நேற்று முன்தினம் பாதை வசதியில்லாததால், நெல்வயல் வழியாக சுமந்து சென்று மயானத்தில் தகனம் செய்தனர். இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஆதிதிராவிடர் மயானத்திற்கு உரிய பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: