கடைகளுக்கு உள்ளே, வெளியே கண்காணிப்பு காமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும்; மதுரை எஸ்பி வேண்டுகோள்

மதுரை, ஜன.22: மதுரை மாவட்டத்தில் கடைகளுக்கு உள்ளே, வெளியே கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மதுரை எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மதுரை எஸ்பி பாஸ்கரன் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வகையில் மதுரை மாவட்டத்தில் இந்த சிசிடிவி காமிராக்களை அவசியம் பொருத்த வேண்டும். பொதுமக்கள் வணிக ரீதியிலான கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் தாமாக முன்வந்து தங்களது கடைகளுக்கு உள்ளேயும், கடைகளுக்கு வெளியேயும் தங்கள் கட்டிடங்களுக்கு வரும் நபர்களை பற்றி கண்காணிக்க சிசிடிவி காமிராக்களை பொருத்த வேண்டும்.  மேலும் அவ்வாறு சிசிடிவி பொருத்த கடைகளுக்கு காவல்துறை மூலம் நோட்டீஸ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்காத வணிக வளாக உரிமையாளர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் மீது கண்டிப்பாக மேற்கண்ட அரசாணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி வைக்க மறுப்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். தாமாக முன்வந்து காமிராக்களை கடைகளில் பொருத்தி ஒரு பாதுகாப்பான மாவட்டமாக மதுரையை மாற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: