பள்ளி செல்லா குழந்தைகள் 33 ஆயிரம் பேர் கண்டுபிடிப்பு

கோவை, ஜன.22:  தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 33 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நூறு சதவீதம் மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தவும், மாணவர்களின் இடைநிற்றல் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளியில் சேராத     குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தெருவோர சிறார்கள், நகர்புறங்களில் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், பெரியோர் பாதுகாப்பின்றி வாழும் குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், தற்போது கொரோனா பரவல் காரணமாக பல குழந்தைகள் பள்ளிகளில் இருந்து பாதியில் நின்றுள்ளனர். குடும்ப பிரச்னை, பொருளாதார ரீதியிலான பிரச்னை காரணமாக பணிக்கு சென்று வருகின்றனர்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன. இதற்காக, சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இவர்கள், வீடு வீடாக சென்றும், ஒவ்வொரு வீதிகளிலும் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். அதன்படி, 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரத்து 591 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில், 33 ஆயிரத்து 335 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர, தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது கண்டறியப்படும் குழந்தைகள் உடனடியாக பள்ளிகளில் சேர்க்கப்படுவர் எனவும், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிக்காக நடப்பாண்டில் ரூ.9 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: