×

பவானி ஆற்றில் குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு

ஈரோடு, ஜன.22: பவானி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் கொண்டு செல்லும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பவானி ஆற்றில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இதனால், கூட்டுகுடிநீர் திட்டங்கள் மற்றும் பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர் திருடப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகளால் பொதுமக்களுக்கு குடிநீரை முழுமையாக விநியோகிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் மாக்கினாகோம்பை மூன்ரோடு அருகே பவானி ஆற்றில் இருந்து காரப்படி பகுதிக்கு குழாய்கள் மூலம்a தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி கூறியதாவது: சத்தியமங்கலம் மாக்கினாகோம்பை மூன்ரோடு சந்திப்பில் பவானி ஆற்றில் இருந்து காரப்படி ஊருக்கு சுமார் 5 கிமீ தூரத்திற்கு ராட்சத மின் மோட்டார்களை கொண்டு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இதனால் பாசன விவசாயிகள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றில் கிணறு அமைக்கும் இடத்தில் ஏற்கனவே நம்பியூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அரசால் செயல்படுகிறது. அதற்கு கீழே பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயலுக்கு வந்துள்ளது. எனவே, குடிநீர் திட்டங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பவானி, காலிங்கராயன் பாசன திட்டத்தில் உள்ள சட்டவிரோத நீரேற்று செயல்பாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதோடு, சட்டவிரோதமாக தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு தளபதி கூறினார்.

Tags : Bhavani river ,
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து