தியாகி குமரன் மணி மண்டப பணியினை விரைந்து முடிக்க கோரி மனு

ஈரோடு, ஜன. 22:  தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமையில் சங்க நிர்வாகிகள் நேற்று அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்திட வேண்டும். சென்னிமலையில் வைக்கப்பட்டுள்ள தியாகி குமரன் சிலையின் படிகட்டுகள் சிதலமடைந்துள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும். ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டிற்கு தியாகி குமரன் பெயரை சூட்ட வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் செங்குந்தர் கைக்கோளர் முதலியார்களுக்கு பாத்தியப்பட்ட கைத்தறி நெசவு தொழிலுக்கு உண்டான பாவடி சொத்துக்களை உரிய ஆவணங்கள் பெற்று தர வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தியாகி குமரனுக்கு உருவ சிலை அமைத்து தர வேண்டும். மேலும் கிபி 17ம் நூற்றாண்டில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னன் சந்திரபதி முதலியாருக்கு உருவ சிலையும், மணிமண்டபம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். மேலும், ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சம்பத் நகர் சாலைக்கு தியாகி குமரன் சாலை என்ற பெயர் சூட்டியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், அமைச்சர் முத்துசாமிக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: