திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு; அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய 3 நாட்கள் தடை

திருவண்ணாமலை, ஜன.22: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய 3 நாட்கள் தடை விதித்திருப்பதால், நேற்று தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ராஜகோபுரம் எதிரில் வழிபாடு நடத்திய பக்தர்கள் வெளிபிரகாரம் மற்றும் மாடவீதியை வலம் வந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. எனவே, அனைத்து மத வழிபாட்டு தலங்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்திருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வாரந்தோறும் 3 நாட்கள் தடை எனும் கட்டுப்பாடு மீண்டும் நேற்று நடைமுறைக்கு வந்தது. எனவே, இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

ஆனாலும், கோயிலில் வழக்கம்போல தினசரி நடைபெறும் 6 கால பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தடையின்றி நடக்கிறது. கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய தடை விதித்திருந்தனர். அதைத்தொடர்ந்து, கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. தற்போது, மீண்டும் 3 நாட்கள் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதையொட்டி, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில்களில் அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராஜகோபுரம் எதிரில் நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளி பிரகாரம் மற்றும் மாடவீதியை வலம் வந்து வழிபட்டு சென்றனர்.

Related Stories: