கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்குகிறது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

கலசபாக்கம், ஜன.22: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. இதன் மூலம் நடுத்தர மக்கள் பயன்பெற்று வந்தனர். இதையொட்டி, ஊரக வளர்ச்சி துறை மூலம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரித்து, வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் தகுதியான பயனாளிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் ஒரு சில தினங்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகள் விவரம், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில் வீடு கட்டியவர்கள் விவரம் மற்றும் விடுபட்டவர்கள் விவரங்கள் கணக்கு எடுக்கப்படவுள்ளது. மேலும், வடகிழக்கு பருவ மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்கள், அதேபோல் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் விவரங்களும் கணக்கெடுக்கப்பட உள்ளது. கிராமங்கள்தோறும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் முகாமிட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தகுதியான பயனாளிகளுக்கு விரைவில் கான்கிரீட் வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Related Stories: