கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், ஜன.22: கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று தொடங்கி வைத்தார்.  குமரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை  சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் கள விளம்பர துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி இணைந்து குமரி மாவட்டத்தில் கோரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பிரசாரம் கோட்டார் காவல் நிலையம் முன்பு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

 நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் திருநெல்வேலி களவிளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப், கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர், மாநகர் நல அதிகாரி டாக்டர் விஜயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் போது கோரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

Related Stories: