சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

கடலூர், ஜன. 22: சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லுார் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி, வார்டு உறுப்பினர்கள் 7 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்தனர். அப்போது, கடந்த ஓரு ஆண்டாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடடனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் பல்வேறு வகையில் நிதி கையாடல் மற்றும் முறைகேடுகள் நடக்கிறது. இதனால் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தில் வேலைகள் நடக்காமல் நடப்பதாக அரசு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி கேட்பவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட பலமடங்கு பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ரசீதும் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.

எனவே, அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: