×

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க கோரி சுகாதாரப்பணிகள் இயக்குனருக்கு மருத்துவமனை பணியாளர்கள் மனு

தஞ்சை, ஜன.22: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி சுகாதாரப்பணிகள் இயக்குனருக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி கடந்த 29.11.2021 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்னிலையில் முதன்மைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அமைச்சரும், முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நியாயமானது. விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை உறுதிமொழிப்படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மூலம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் இயக்கம் நடைபெற்றது.

தஞ்சாவூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் குமார் சந்தித்து சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி 3ம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் சென்னை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : Director of Health Services ,
× RELATED சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆபீஸ்...