முக்கிய சாலையில் சுற்றி திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஆவடி: தினகரன் செய்தி எதிரொலியால், ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தர்.சென்னையில் இருந்து பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர்,  திருத்தணி வழியாக திருப்பதிக்கு சிடிஎச் சாலை செல்கிறது. இச்சாலையை சுற்றியுள்ள பகுதியில் பொறியியல், கலை கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் நிறுவனங்கள்  ஏராளமாக உள்ளன. இந்த சாலை வழியாக  தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், சிடிஎச் சாலை எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். இச்சாலையில், பல இடங்களில் மாடுகள் குறுக்கும், நெடுக்குமாக நடமாடி வந்தன. இவைகள் பல நேரங்களில் சாலையின் முக்கிய பகுதிகளில் படுத்து தூங்குவதால், காலை, மாலை வேளையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டது. மேலும், சி.டி.எச் சாலையின் குறுக்கே செல்லும் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்திலும்  சிக்கியுள்ளனர். சில உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன.

இதுபோன்று சுற்றி திரியும் மாடுகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை முட்டி மோதி உள்ளன. இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வந்தனர். குறிப்பாக, வீட்டில் உள்ள மாடுகளை உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுகின்றனர். பின்னர்,  அவைகளை பற்றி கண்டு கொள்ளுவதில்லை. இதன் பிறகு மாடுகள் முக்கிய வீதிகள், நெடுஞ்சாலைகளில் இஷ்டம் போல் சுற்றி திரிந்து வந்தன. இதுபற்றி, தினகரன் நாளிதழில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் காலை ஆவடி மாநகராட்சி நிர்வாகம், ஆவடி போக்குவரத்து பிரிவு போலீசார் இணைந்து முக்கிய சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர். குறிப்பாக, ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் பகுதி சிடிஎச் சாலை, ஆவடி புதிய ராணுவ சாலை, ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் சாலையில் நடமாடி, படுத்து தூங்கிய 20க்கு மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி  ஊழியர்கள் உதவியுடன் பிடித்தனர். பின்னர், அவைகளை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தீவினம் போட்டு அடைத்தனர்.

இதையடுத்து, காணாமல் போன மாடுகளை தேடி வந்த அதன் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றதை அறிந்து, அதிகாரிகளை சந்தித்தனர் அப்போது அவர்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு உரிய அபராதம் செலுத்தி விட்டு, தங்களது மாடுகளை  மீட்டு சென்றனர். அவர்களிடம், இனி மாடுகளை வீட்டு கொட்டகையில் அடைத்து வைக்க வேண்டும். அதனை சாலையில் சுற்றி திரிய விட கூடாது. மீறினால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். முக்கிய சாலையில் சுற்றி திரிந்து விபத்துகளையும், போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்தும் மாடுகளை பிடித்த மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகளுக்கும், உதவியாக இருந்த தினகரன் நாளிதழையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: