ஆவடி பகுதியில் போக்குவரத்து விதிமீறிய 1800 பேர் மீது வழக்கு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி,  நேற்று முன்தினம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் 18 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இதில், சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிய 1800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணம், அதிவேகமாக ஓட்டுதல், லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் உள்ளிட்ட விதிமுறைகள் மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்தனர்.

மேலும், ஆவடி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவடி காவல் ஆணையரக பகுதியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து சாலைகளில் வாகனங்களை ஓட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: