×

மொபைல் கோர்ட்டின் ஆன்லைன் அபராத தொகையில் மோசடி போலி வங்கி சீல் ஏற்பாடு செய்த வக்கீல் கைது

திருச்சி, ஜன. 21: திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் என ஏராளமான நீதிமன்றங்கள் உள்ளது. இதில், திருச்சி மொபைல் கோர்ட் நீதிமன்றமும் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டாக கோபால கண்ணன் உள்ளார். இந்த நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக நவலூர் குட்டப்பட்டு மாரியம்மன் கோவிலை சேர்ந்த பழனிசாமி மகன் பிரபு (38) உள்ளார். இதில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆன்லைன் அபராத தொகை வரவு வைக்கப்படாமல் உள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், கடந்த 5 மாதத்திற்கான ஆன்லைன் அபராத தொகையான ரூ.40 ஆயிரத்தை போலி ஆவணம் மற்றும் போலி நீதிமன்ற முத்திரை தயாரித்து வங்கியில் அளித்து மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாஜிஸ்திரேட் கோபால கண்ணன் உத்தரவின் பேரில் மொபைல் நீதிமன்ற இளநிலை உதவியாளர் முருகன் பிரபு மாநகர குற்றப்பிரிவு போலீசில் கடந்தாண்டு நவம்பர் 29ம் தேதி புகார் அளித்தார். புகார் குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் பாரதிதாசன் உத்தரவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன், தீவிர விசாரணை நடத்தி மோசடி செய்த பிரபுவை நவம்பர் 30ம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கில் வங்கி முத்திரையை போலியாக தயார் செய்து உதவியதாக தீரன்நகர் 10வது குறுக்கு தெருவை சேர்ந்த வக்கீல் அரவிந்தன் (44) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் வக்கீல் அரவிந்தனை நேற்று கைது செய்த இன்ஸ்பெக்டர் கோசலைராமன், ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் கார்த்திக் ஆசாத், வக்கீல் அரவிந்தனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து வக்கீல் அரவிந்தனை துறையூர் சப்ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி