பென்னாகரம் அருகே வாலிபரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி மறியல்

பென்னாகரம், ஜன.21: பென்னாகரம் அருகே வாலிபரை தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காளியப்பன். அதே பகுதியை சேர்ந்தவர் மோகன். இருவருக்கும் முன்விரோதம் காரணமாக, 2 நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த காளியப்பன்,  பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காளியப்பனின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய மோகன், அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி, பென்னாகரம் - மேச்சேரி வழி பெரும்பாலை மெயின்ரோட்டில், 100க்கும் மேற்பட்டோர், மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிப்பதாக கூறி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதி கூறியதன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: