மாவட்டத்தில் ஒரே நாளில் 1606 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 1606 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது. சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமினை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் அல்லது 273 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று வரை 1606 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்களிடம் தொடர்பில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தவறாமல் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி முகாமில் கலந்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின் போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், துணை கலெக்டர்(பயிற்சி) அபிநயா, பிடிஓ சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மருத்துவர்கள் அபிநயா, வீணா மற்றும் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: