இலவச தொலைபேசி எண்ணில் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

சிவகங்கை, ஜன.21: கொத்தடிமையாக உள்ள தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொத்தடிமை முறை, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின்படி தடைசெய்யப்பட்ட குற்றச்செயலாகும். கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு, மறுவாழ்வு அளித்திட மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தான் வாங்கிய கடனுக்காகவோ அல்லது முன்பணத்திற்காகவோ அல்லது சில சமூக கடமைகளுக்காகவோ அவரின் விருப்பப்பட்ட இடத்திற்கு செல்லும் உரிமை, விருப்பப்பட்ட வேலை செய்யும் சுதந்திரம் மற்றும் தான் உற்பத்தி செய்த பொருட்களை சந்தை நிலவர மதிப்பின்படி விற்பனை செய்யும் உரிமை சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை ஆகியவற்றை இழந்திருந்தாலோ அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கலாம். இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: