எம்எல்ஏவின் தந்தை தவறவிட்ட ரூ.1 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த ஊழியர்: புத்தாடை வழங்கி கௌரவிப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய மணப்பாறை எம்எல்ஏ அப்துல்சமதுவின் தந்தையுமான பக்கீர் முகமது, ரூ.1 லட்சம் எடுத்து கொண்டு உரம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாமல்லபுரம் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலை, பூந்தண்டலம் பகுதியில் உள்ள செடிகள் வளர்ப்பு நர்சரிக்கு சென்ற அவர், அங்கு தேனீர் அருந்தி விட்டு சென்றார். சிறிது தூரம் சென்று பார்த்தபோது, அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர், நர்சரிக்கு சென்று தேடிப்பார்த்து, விரக்தியில் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், பக்கீர் முகமது தவற விட்ட ரூ.1 லட்சம், நர்சரியில் உள்ள செடிகளுக்கு நடுவே கிடந்தது. அதை நர்சரி ஊழியர் நூர்முகமது (30), எடுத்து நர்சரி உரிமையாளர் பாஸ்கரனிடம் கொடுத்தார். உடனே அவர், பக்கீர் முகமதுவை செல்போனில் தொடர்பு கொண்டு ‘உங்கள் பணம் கிடைத்து விட்டது.  வந்து வாங்கி செல்லுங்கள்’ என தெரிவித்தார். இதையடுத்து அவர், நர்சரிக்கு சென்று தவற விட்ட பணத்தை பெற்று கொண்டார். மேலும், நேர்மையாக நடந்து கொண்ட ஊழியர் நூர்முகமதுவை பாராட்டி நன்றி தெரிவித்து, ரூ.5 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர், அதை வாங்க மறுத்துவிட்டார். இதனால், நெகிழ்ச்சியடைந்த பக்கீர்முகமது, அவருக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்து கௌரவித்தார். மேலும், புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பிலும் ஊழியர் நூர்முகமதுவை பாராட்டினர்.

Related Stories: