அடகு கடைக்காரருக்கு வெட்டு: வாலிபருக்கு வலை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே மாமண்டூர் ஊராட்சியில் ஜுவல்லரி மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் தர்மா. நேற்று மாலை மாமண்டூர் அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், நகை அடகு வைக்க, தர்மா கடைக்கு சென்றார். நகை அடகு வாங்குவதில் சந்தேகம் ஏற்பட்டதால், தர்மா நகையை அடகு வாங்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தர்மாவின் தலையில் 4 இடங்களில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயமடைந்த அவர், அலறி துடித்தபடி வெளியே ஓடி வந்தார். இதை பார்த்ததும், அக்கம் பக்கத்தினர், தர்மாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: