தொழிலதிபர் வீட்டில் 43 சவரன் மாயம்: வேலைக்கார தம்பதிக்கு வலை

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 39வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா (40). இவர்களது வீட்டில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27), அவரது மனைவி சத்யா ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கி, வீட்டு வேலைகள் செய்தனர். கடந்த 10ந் தேதி சந்திரசேகர் வீட்டில் வைத்திருந்த ரூ.1000 காணாமல் போனது. இதனை, விக்னேஷ், அவரது மனைவி சத்யா ஆகியோர் திருடியதாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் இருவரையும் வேலையை விட்டு நீக்கி வீட்டில் இருந்து அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுஜாதா, சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றார், அப்போது அதில் நகை இல்லை. இதையடுத்து வீடு முழுவதும் 43 சவரன் நகையை தேடியும் கிடைக்கவில்லை. உடனே சந்திரசேகர், வீட்டில் வேலை செய்த விக்னேஷ், அவரது மனைவி சத்யா ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள், சுஜாதாவை பற்றி அவதூறாக பேசியுள்ளனர்.

இதுகுறித்து சந்திரசேகர், கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 43 சவரன் தங்க நகைகளை, விக்னேஷ் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் திருடி இருக்கலாம் என  சந்தேகம் உள்ளது. எனவே, போலீசார் நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து வேலைக்கார தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அலுமினிய பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த விஜய் (30) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக அங்கேயே தங்கி பணிபுரிகிறார். அவர், வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய் கம்பெனியில் இருந்து வெளியே செல்லும்போது, ஒரு பெரிய பையை கொண்டு சென்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த கம்பெனி நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், வாணிதாசன் ஆகியோர் அந்த பையில் என்னவென்று கேட்டனர்.அதற்கு அவர், பதில் சொல்லாமல் அங்கிருந்து பையுடன் தப்பியோட முயன்றார். உடனே அவரை விரட்டி பிடித்து, பையில் சோதனை செய்தபோது ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலுமினியப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரை திருவள்ளூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விஜய்யை கைது செய்தனர்.

Related Stories: