இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது என திருவள்ளூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. தமிழக அரசு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பயன்பெற திருவள்ளூர் மின்வாரிய கோட்டத்தில் உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கன்னிகைப்பேர், ராமஞ்சேரி, பூண்டி, புல்லரம்பாக்கம், மெய்யூர், ஏரையூர், வெள்ளாத்துக்கோட்டை, பாலவாக்கம், போந்தவாக்கம், மாம்பாக்கம், பென்னனூர்பேட்டை, ஆத்துபாக்கம், தண்டலம், முக்கரம்பாக்கம், செங்கரை, ஏனாம்பாக்கம், அத்திவாக்கம், பண்டிக்காவனூர், மஞ்சகாரணை, கொப்பூர், பாப்பரம்பாக்கம், சேலை, ஏகாட்டூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இலவச மின்சாரம் வேண்டி 31.3.2022 வரையில் பதிவு செய்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (21ம் தேதி) திருவள்ளூர், பெரியகுப்பம், எண். 6, லால்பகதூர் சாஸ்திரி தெருவில் செயல்படும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் ஆகிய விவரங்களை அளித்து இலவச மின்சார இணைப்பு பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

Related Stories: