சிட்லபாக்கம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்களை அளவிடும் பணி தொடங்கியது

தாம்பரம்: சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவிடும் பணிகளை நேற்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு, அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான சிட்லப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து, 450க்கும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகற்ற வேண்டுமென, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 450 வீடுகளை அகற்ற வருவாய்த் துறை சார்பில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதிகாரிகள் அகற்ற முயற்சிப்பதாக, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதிகளை அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை நேற்று காலை தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை தொடங்கினர்.

அசம்பாவிதங்களை தடுக்க அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், பட்டா நிலங்களை அளக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களிடம் உள்ள நிலப்பத்திரங்கள், பட்டா விவரங்களை சரிபார்த்த பிறகு, இங்கு அளவீடு செய்யும் பணி நடைபெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், வருவாய் துறையினர் தொடர்ந்து அளவிடும் பணியில் ஈடுபட்டதால், அதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார். இதனால், பொதுமக்கள் ஒதுங்கி நின்றனர். இதையடுத்து, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர்.இதுகுறித்து, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி கூறுகையில், ‘‘கிராம நத்தம் மற்றும் ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மட்டுமே அளவீடு செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த பணி நடைபெறுகிறது,’’ என்றார். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: