×

இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய கோரி வக்கீல்கள், மாணவர்கள் முற்றுகை

பெரம்பூர்: கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழக்கிழமை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வியாசர்பாடி புது நகரை சேர்ந்த, சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் (21), முகக்கவசம் அணியாமல் அவ்வழியாக சென்றதால், அவரை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர். இதில், வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியில் இருந்த காவலர் உத்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.உடனே போலீசார், அப்துல் ரஹீமை காவல் நிலையம் அழைத்து சென்று, இரவு முழுவதும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே அப்துல் ரஹீம் தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கொடுங்கையூர் காவலர் உத்தரகுமார் மற்றும் ஏட்டு பூமிநாதன் ஆகியோரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அப்துல் ரஹீம் மீதான தாக்குதலுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் நசீமாவை பணியிடை நீக்கம் செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று, புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவலர்கள் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோஷம் எழுப்பினர்.  அவர்களிடம் துணை கமிஷனர் ஈஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.   

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...