தூத்துக்குடியில் கன்டெய்னருக்குள் அடைத்து வைத்து தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

தூத்துக்குடி, ஜன. 21: தூத்துக்குடியில் கன்டெய்னருக்குள் தொழிலாளியை அடைத்து வைத்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், வாலிபர் ஒருவரை  கன்டெய்னருக்குள் அடைத்து வைத்து இரவு முழுக்க கை, கால்களை கட்டி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு நேற்று மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த மத்திய பாகம் போலீசார் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தாக்கப்பட்ட நபர், கணேசன் நகரை சேர்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம் (17), கிணறு வெட்டும் தொழிலாளி என்பதும், தாக்கியவர்கள் கோரம்பள்ளம் அய்யனடைப்பை சேர்ந்த சாம்காலின்ஸ் (37), கணபதி நகர் சுரேஷ்(20), ஜாகீர்உசேன் நகர் கஜேந்திரன் (18) என்றும் தெரிய வந்தது. அவர்கள், மாரிசெல்வத்தை இரும்பு கம்பிகள் திருட வந்திருக்கலாம் என்று கூறி தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: