×

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் அடித்துக்கொலை

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம்(51). இவர் கடந்த 40 ஆண்டாக புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்வது மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு டீ மற்றும் உணவு வாங்கிக் கொடுக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். இதில் கிடைக்கும் சிறிய தொகையை வைத்து தினசரி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் நாகரத்தினம் திருமணம் ஆகாத நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே பார்வையாளர்கள் தங்கும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அரசு மருத்துவமனை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்ட வளாகத்தின் ஒரு கட்டிடத்தில் மருத்துவத்துறையின் சிக்கன நாணய சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிக்கன நாணய சங்க அலுவலக கட்டிடத்தில் நாகரத்தினம் தங்கி, சங்க அலுவலகத்தை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக சங்க நிர்வாகிகள் மாதம் ரூ.1000 நாகரத்தினத்திற்கு வழங்கினர்.

இந்நிலையில் நேற்று நாகரத்தினத்தை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து மருத்துவமனை வளாகத்திலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து நேற்று அங்கு வந்த ஊழியர்கள் சிலர், நாகரத்தினம் உடலில் ரத்த காயங்களுடன் ஆடை களைந்து இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து நாகரத்தினத்தின் உடலை கைப்பற்றிய புதுகை டவுன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எப்படி கொலை செய்யப்பட்டார், மது போதையில் யாரேனும் பாலியல் தொந்தரவு செய்து கொன்றார்களா? வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்