கரூர், ஜன. 21: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பதிவை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்களின் ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், புதிதாக பதிவு செய்வது மற்றும் ஏற்கனவே உள்ள பதிவை புதுப்பிக்க www.labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணங்களையும், இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.தொழில், வணிக நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு நடத்துவார்கள். அப்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.