போலீசுக்கு பயந்து ஆண்கள் தலைமறைவு மயானத்துக்கு எடுத்துச்சென்று மூதாட்டி சடலத்துக்கு சடங்குகள் செய்த பெண்கள் கலசபாக்கம் அடுத்த வீரலூரில் பரபரப்பு

கலசபாக்கம், ஜன.21: கலசபாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் போலீசுக்கு பயந்து ஆண்கள் தலைமறைவானதால் இறந்த மூதாட்டியின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச்சென்று பெண்களே இறுதி சடங்குகளை செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் கடந்த 16ம் தேதி மயானப்பாதை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதியில் கலவரம் ஏற்பட்டு, வீடுகள் மற்றும் வாகனங்களை ஒருதரப்பினர் சேதப்படுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும், மயானப்பாதை பிரச்னை சம்பந்தமாக 21 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்தனர். தொடர் கைது காரணமாக ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீரலூர் ஊராட்சி கூற்றம்பள்ளி பகுதியை சேர்ந்த மூதாட்டி உண்ணாமலை(80) என்பவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள பெண்கள், மூதாட்டி சடலத்தை கட்டிலுடன் தூக்கி வந்து நடுரோட்டில் வைத்து, நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைபட்சமாக இல்லாமல் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். சடங்குகள் செய்ய ஆண்கள் யாரும் இல்லை. நாங்கள் எப்படி சடங்குகளை செய்வது என கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் மூதாட்டி சடலத்துடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்பி பவன்குமார், ஏடிஎஸ்பி ராஜகாளியம்மன், போளூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், கிராமத்தில் உள்ள யாரும் அச்சம் அடைய வேண்டாம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தமில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தனர். அதன்பேரில் பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, மூதாட்டியின் சடலத்தின் முன்பு அப்பகுதி பெண்கள் மட்டுமே கூடி பெரும்பாலான சடங்குகளை செய்தனர். போலீசுக்கு பயந்து சடங்கில் கலந்து கொள்வதில் ஆண்கள் தயக்கம் காட்டினர். இதையடுத்து, மூதாட்டியின் மகன் மற்றும் சில பெண்கள் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்சென்று, இறுதிச்சடங்குகளை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: