அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கரில் விளைந்த உயர்ரக பொன்னி நெல் அறுவடை பணி தீவிரம்

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உயர்ரக பொன்னி நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ெசாந்தமான அசையா சொத்துக்கள், விளை நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அதில், பெரும்பாலானவை குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் பகுதி பொற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில், அண்ணாமலையார் கோயில் நிர்வாகமே நேரடியாக நெல் சாகுபடி செய்து வருகிறது.

இந்த கிராமத்தில் மட்டும் கோயிலுக்கு சொந்தமான 147 ஏக்கர் விளைநிலம் உள்ளன. அதற்கான பாசன வசதிக்கு தனியாக சுமார் 36 ஏக்கரில் ஒரு ஏரியும், பம்புசெட் இணைப்புடன் கூடிய 3 திறந்தவெளி கிணறுகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால், தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள ஏரியும், பாசன கிணறுகளும் முழுமையாக நிரம்பியிருக்கிறது. எனவே, அந்த பகுதியில் இந்த ஆண்டு விவசாயம் செழித்திருக்கிறது.அதன்படி, அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில், சுமார் 32 ஏக்கர் பரப்பளவில் உயர்ரக பொன்னி நெற்பயிர் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பையும் கடந்து இந்த நெற்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. மேலும், வேளாண்துறையின் நேரடி ஆலோசனையின் அடிப்படையில், செம்மை நெல் சாகுபடி முறையில் விவசாயம் நடந்துள்ளது.

இந்நிலையில், கோயில் நிலத்தில் விளைச்சலாகி உள்ள உயர்ரக பொன்னி நெற்பயிர் அறுவடை கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை ேகாயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் நேரில் பார்வையிட்டார். அறுவடை இயந்திரங்கள் மூலம் நடைபெறும் இந்தப்பணி இன்னும் 4 நாட்கள் நடைபெறும் எனவும், விளைநிலத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நெற்கதிர் சேதமாவதை தவிர்க்க நிதானமாக அறுவடை நடப்பதாகவும் ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.மேலும், கோயில் நிலத்தில் விளைச்சலாகும் நெல் முழுவதும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யவும், அன்னதான திட்டத்துக்கு பயன்படுத்தவும் உள்ளனர். மேலும், நொய், தவிடு, வைக்கோல் போன்றவை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பயன்படுத்தப்படும்.

Related Stories: