மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் பழமை வாய்ந்த யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் பழுதடைந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு புதிதாக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் ரயில்வே நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து கட்டுவதாக முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்த பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்திற்கும் அரசுக்கும் கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது தமிழக முதல்வரிடமும் கூறியிருந்தனர். அதன்பேரில் நேற்று யானைக்கவுனி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினர். அப்போது, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசியதாவது:  கடந்த ஆட்சி காலத்தில் யானைக்கவுனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தாமதமானது. தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. யானைக்கவுனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி ஜூலை மாதத்திற்குள் முடிவடையும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய பணிகள் விடுபட்டுள்ள பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து முடிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசு தேதி கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பள்ளி தெருவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: