கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு பணிக்கு சரியான நேரத்தில் வராத கண்காணிப்பாளர், ஆர்.எம்.ஓக்கு நோட்டீஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

சென்னை: கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிக்கு சரியான நேரத்தில் வராத மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ நிலைய அதிகாரி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காலை 9.20 மணி ஆகியும் மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவ நிலைய அதிகாரி ஆகிய இருவரும் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் அவர்கள் வழக்கம்போல் பணிக்கு எப்போது வருவார்கள் என்று கேட்டறிந்தார். இதையடுத்து மணி 9.20 ஆகியும் மருத்துவ கண்கணிப்பாளர், மருத்துவ நிலைய அதிகாரி இதுவரை ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: