கலெக்டர் அலுவலகத்திற்கு ‘சிவபெருமான்’ வேடமணிந்து வந்த காங்கிரஸ் நிர்வாகி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நெல்லை, ஜன. 20: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழாவிற்கு அனுமதி வழங்கிய முதல்வர், கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து ‘சிவபெருமான்’ வேடமணிந்து காங்கிரஸ் நிர்வாகி மற்றும் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி தெப்பத் திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. தெப்பத் திருவிழாவை முன்பு போல இந்த ஆண்டும், வெளித்தெப்பத்தில் நடத்திட வேண்டும் என்று கோரி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார் அரசிற்கும், கலெக்டருக்கும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தெப்பத்திருவிழா இன்று (20ம்தேதி) வழக்கம்போல் வெளித்தெப்பத்தில் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர், கலெக்டர், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரசார் கூடினர். நெல்லை மண்டல தலைவர் ஐயப்பன், ‘சிவபெருமான்’ வேடமிட்டு ருத்ராட்சம் அணிந்து, கழுத்தில் அட்டை பாம்பு சுற்றியிருக்க, உடுக்கை, சூலாயுதம் ஆகியவற்றை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலக வாசலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன், துணைத்தலைவர்கள் வண்ணை சுப்பிரமணியன், உதயகுமார், வெள்ளப்பாண்டி, ஐஎன்டியூசி கண்ணன், வேலுச்சாமி, முன்னாள் மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் குறிச்சி கிருஷ்ணன், ராஜகிளி ஐயப்பன், வார்டு தலைவர் சிவராமன், பரணி இசக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் தலைமையில் கட்சியினர் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related Stories: