நெல்லை டவுன் போஸ் மார்க்கெட்டில் மந்தகதியில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு

நெல்லை, ஜன. 20: நெல்லை டவுனில் மந்தகதியில் நடந்துவரும் போஸ் மார்க்கெட் கட்டிட பணிகள் விரைந்து முடிக்கப்படுமா என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை டவுனில் 1 ஏக்கர் 82 செண்ட்டில் 150க்கும் மேற்பட்ட கடைகளுடனும், 224 தரைக்கடைகளுடன் நேதாஜி போஸ் மார்க்கெட்  செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பழைய கடைகளை இடித்துவிட்டு கூடுதல் வசதிகளோடு புதிய கடைகள் கட்டப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10.97 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் 2020 நவம்பரில் தொடங்கி 2021 ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணிகளும், தொடர்ந்து குழி தோண்டும் பணியும் நடைபெற்றது. அப்போது குழிகளில் நீருற்று ஏற்பட்டதால் மாநகராட்சி லாரி மூலம் பலமுறை தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதனால் பணிகள் தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

போஸ் மார்க்கெட் வியாபாரிகளுக்கு பொருட்காட்சி மைதானம், மாவட்ட கல்வி அலுவலக வளாக பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டது. அந்த இடங்களில் போதிய வசதிகள் இல்லாமல், பல்வேறு சிரமங்களோடு வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். கொரோனா முதல் அலை, 2ம் அலை, தற்போது 3ம் அலை காலங்களில் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பலர் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

போஸ் மார்க்கெட் பகுதியில் கடைகள் கட்டுவதற்காக பில்லர்கள் அமைக்கும் பணி தொடங்கியது. அதன்பிறகு பணிகள் எதுவும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரில் பாளை பேருந்து நிலைய பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. டவுன் அரசு பொருட்காட்சி திடலில் வணிக வளாக கட்டிடப் பணிகளும் முடிவுறும் நிலையில் உள்ளது. சந்திப்பு பஸ்நிலைய பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் போஸ் மார்க்கெட் கட்டிட பணிகள் 2021 ஆகஸ்ட்டில் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2022ம் ஆண்டு தொடங்கி போதும் பில்லர் அமைக்கும் பணிகளும் பாதியிலேயே உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: