×

5 நாட்களுக்கு பின்னர் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு

திருச்சி, ஜன. 20: தமிழகத்தில் 3வது கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக வார இறுதிநாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 5 நாட்கள் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தைப்பூசத்திருவிழா நேற்றுமுன்தினம் தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்தில் கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றதால் கோயில்களில் அர்ச்சர்கள் மட்டும் பூஜைகள் நடத்தி சாமிக்கு அலங்காரம் செய்தனர்.

இதனால் தைப்பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் 5 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று அதிகாலை அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். ரங்கம் ரெங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், நாச்சியார் கோயில், மலைக்கோட்டை, வயலூர் முருகன் கோயில், வழிவிடு முருகன் கோயில், பூலோக நாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

அதுபோல் சர்ச்சுகளிலும் வழிபாடு நடத்த அனுமதி அளித்ததை அடுத்து நேற்று சர்ச்சுகளும் திறக்கப்பட்டது. இதில் எடத்தெரு மெயின்ரோடு உலக மீட்பர் பசிலிக்கா, ஆரோக்கிய அன்னை ஆலயம், பழைய கோயில் உள்ளிட்ட சர்ச்சுகளிலும் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர். மேலும், புகழ்பெற்ற நத்தர்வலி தர்காவிலும் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். இதற்கிடையில் நாளை முதல் ஞாயிறு வரை மீண்டும் 3 நாட்கள் அரசு உத்தரவின் படி கோயில்களில் தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த தடை விதிக்கப்படும்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு