(தி.மலை) மாதிரி கிராம ஊராட்சி தேர்வு பெரணமல்லூர் ஒன்றியத்தில்

பெரணமல்லூர், ஜன.20: பெரணமல்லூர் ஒன்றியத்தில் மாதிரி கிராம ஊராட்சி பகுதியாக அறிவிக்கப்பட்ட 2 கிராம ஊராட்சி பகுதியில் ஆயத்த பணிகள் நேற்று தொடங்கியது. தமிழக அரசு தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்தில் இரண்டு கிராமங்களை தேர்வு செய்து மாதிரி கிராம ஊராட்சி ஆக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 36 கிராமங்கள் மாதிரி கிராம ஊராட்சி ஆக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரணமல்லூர் ஒன்றியத்தில் செப்டாங்குளம் மற்றும் எஸ்.காட்டேரி பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று செப்டாங்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மாதிரி கிராம ஊராட்சி அமைப்பதற்கான அடிப்படை நிலை குறித்து கிராமத்தின் வரைபடம் வரைந்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும், கிராமத்தில் சுகாதார வசதிகள் குறிப்பாக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி, கழிவு நீர் வெளியேற்றும் வசதி அமைத்திட வேண்டும். மேலும் அரசு கட்டிடங்கள் புனரமைத்தல் மற்றும் திட, திரவக் கழிவுகளை பிரித்து எடுத்தல், மண்புழு உரம் தயாரிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை இந்த பகுதியில் அமைத்திட தேவையான நடவடிக்கைகளை 15வது நிதிக்குழு மானியம் மூலம் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: