அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜன.20: அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளதாவது:அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. //eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத் தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற 156 வகையான இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள் பதிவு செய்துகொள்ள 16முதல் 59வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவிற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓடிபி அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பிறகு பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம் பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: