விவசாயி கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்

இளையான்குடி, ஜன.20: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆரம்பகோட்டையைச் சேர்ந்த கருப்பையா மனைவி பிச்சைமணிக்கும், அவரது தங்கை சாந்திக்கும் இடப்பிரச் னை இருந்துள்ளது. இதில் பிச்சை மணிக்கு அவரது உறவினரான சாலைக்கிராமம் அருகே வருந்தியைச் சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன்(48), ஆதரவாக செயல்பட்டுள்ளார். இந்த முன்விரோதத்தில் டிச.6ம் தேதி வருந்தி காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சவுந்தரராஜன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிந்து சாந்தி மகனான சிவலிங்கத்தை (26) கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இளையான்குடி இன்ஸ்பெக்டர்(பொ) அழகர் இருந்தார். இந்நிலையில் ‘எனது கணவர் கொலையில் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது’ என சவுந்தரராஜன் குடும்பத்தினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் விசாரணை அதிகாரியை மாற்றி வழக்கை விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமித்து, சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Related Stories: