×

அம்மனேரி கிராமத்தில் எருது விடும் திருவிழா

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அருகே உள்ள அம்மனேரி கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூர் அடுத்த கூலியம் பஞ்சாயத்து அம்மனேரி கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விதிமுறைகளை மீறி சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருது விடும் விழாவை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதையொட்டி, கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேகமாக ஓடும் காளைகளுக்கு பரிசுகள் வழங்குவது, டோக்கன் மூலம் பணம் வசூலிப்பது என விதிமுறைகளை மீறி ஜோராக நடைபெற்ற எருது விடும் விழாவில், விழா நடத்துபவர்கள் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை. தடுப்புகளுக்கு நடுவே ஓடி வந்த எருதுகள் சாலைகளில் அங்குமிங்கும் ஓடி வேடிக்கை பார்த்தவர்களை முட்டித் தள்ளியது. எருதுவிடும் விழாவை காண வந்த பெண்கள் மற்றும் பெண் போலீசார் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு இடமில்லாமல் தவித்தனர். நேற்று முன்தினம், கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அரசு கட்டுப்பாடுகள், நெறிமுறைகளை மீறி எருது விடும் விழா நடைபெற்றது. இதை காண வந்த பொதுமக்கள் பலர், முகக்கவசம் அணியவில்லை. கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற விழாக்களை நடத்துவதால் மேலும் தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Bullfighting ,Ammaneri ,
× RELATED சந்தூரில் எருது விடும் விழா