சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் வளாகத்திலேயே இன்று (20ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகம விதிகளின்படி கோயில் வளாகத்திலேயே சுவாமி பல்வேறு வாகனங்களில் உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி பொன்மயில் வாகனத்தில் உற்சவம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து நேற்றிரவு, கோயில் வளாகத்திலேயே விநாயகர் தேரோட்டம், யானை வாகன உற்சவம் நடந்தது.

விழாவின் முக்கிய நாளான இன்று (20ம் தேதி), சிவசுப்பிரமணியசுவாமி தேரோட்டம் நடக்கிறது. மிகவும் விசேஷமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ‌இதனால், கோயில் வளாகத்திலேயே எளிமையான முறையில் தேரோட்டம் நடத்த, விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி காலை 7 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. இதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை (21ம் தேதி) வேடுபறி உற்சவமும், நாளை மறுநாள் (22ம் தேதி) பூப்பல்லக்கு உற்சவமும், வரும் 23ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது.

Related Stories: