×

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி இயங்கிய கடைக்கு சீல்

விருத்தாசலம், ஜன. 20:  விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி அனுமதியின்றி பலர் கடைகள் நடத்தி வருகின்றனர். அதன்படி செல்போன் விற்பனை மற்றும் ரீசார்ஜ் கடை வைத்திருக்கும் ரேவதி என்பவர் நகராட்சி நிர்வாகத்திற்கு வரி கட்டாமல் 15 வருடத்திற்கு மேலாக கடை வைத்துள்ளார். இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான நகராட்சியினர் கடையை காலி செய்ய கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து கடை நடத்தி வந்ததால் நேற்று கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த ரேவதி நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு நகராட்சி அதிகாரிகள் அனுமதி தர மறுத்ததுடன், மாதாமாதம் தன்னிடம் வாடகை என ஒரு தொகையை வசூலித்து வந்ததாக கூறி நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் அதிகாரிகள் அவரை  கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையில் பேருந்து நிலையத்துக்குள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் நடத்தி வந்த ஆவின் பால் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் வந்தபோது, அதன் உரிமையாளர் கடையை மூட மறுத்துவிட்டார். மேலும் அவர், முன்னாள் அதிமுக எம்எல்ஏ பேசுவதாக கூறி செல்போனைக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். செல்போனை வாங்காமல் நீண்ட நேரமாக அலைக்கழித்த அதிகாரிகள் பின்பு செல்போனை வாங்கி பேசினர். இதையடுத்து சற்று பொறுமை காத்த அதிகாரிகள் ஒரு நாள் கால அவகாசம் தருவதாக கூறிவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில் ரேவதி மற்றும் அவருக்கு ஆதரவான சிலர் எங்கள் கடைக்கு சீல் வைத்தீர்கள். முன்னாள் எம்எல்ஏ கூறியதற்காக அவர்களுக்கு மட்டும் அவகாசம் எப்படி தந்தீர்கள் என கேட்டு நகராட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 அதற்கு அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஜெயபிரகாஷ் நாராயணன் அலுவலக வேலையாக வெளியில் சென்றுவிட்டார். அவர் வந்த பிறகு அவரிடம் கூறிவிட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Vriddhachalam ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...