ஆட்டோ ஆர்சி புத்தகம் கேட்டு தகராறு அக்காவுக்கு சரமாரி கத்தி வெட்டு: தம்பி கைது

ஆவடி: ஆவடியில், ஆட்டோ ஆர்சி புத்தகத்தை மீட்டு தருவதில் ஏற்பட்ட தகராறில், அக்காவை கத்தியால் வெட்டிக் கொல்ல முயன்ற தம்பியை போலீசார்  கைது செய்தனர். ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஆயிஷா (39). பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தையல்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் செய்யது அன்வரை பிரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். ஆயிஷாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கின்றனர். ஆயிஷாவின் தம்பி ரியாஸ் (32). ஆட்டோ டிரைவர். பூந்தமல்லி அருகே மாங்காட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன் ஆயிஷா, ₹1.40 லட்சத்தில் ரியாசுக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்தார். அதன் ஆர்சி புத்தகத்தை  தன்வசம் வைத்துக் கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆயிஷா, தனது தோழியின் அவசர தேவைக்காக ஆர்சி புத்தகத்தை அடமானம் வைத்து ₹1 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த ரியாஸ், ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை மீட்டு தரக்கோரி ஆயிஷாவிடம் வற்புறுத்தியுள்ளார்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆயிஷா பருத்திப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் சென்ற ரியாஸ், ஆயிஷாவை வழிமறித்து, ஆர்சி  புத்தகத்தை மீட்டு தரக்கோரி தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரியாஸ், ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து ஆயிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில், அவரது கழுத்து, காது, கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு அலறி துடித்து, உயிருக்கு போராடினார். உடனே ரியாஸ், அங்கிருந்து ஆட்டோவில் தப்பிவிட்டார். ஆயிஷாவின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்து, அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி, ஆவடி இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரியாசை, தனிப்படை அமைத்து கைது செய்தார்.  

Related Stories: