காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 1 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு எல்லை கல் நடும் பணி தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் ₹1 கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி நேற்று தொடங்கியது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாான நிலங்கள், சொத்துக்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமாக உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் அருகே திருமால்பட்டு கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான ₹1 கோடி மதிப்பில் 8.80 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி கோயில் நிலங்கள் அளவீடு செய்து, எல்லை கற்கள் நடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் திருமால்பட்டு கிராமத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் நிலத்தையும் செயற்கைக் கோள் உதவியுடன் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. அதில், கோயில் நிலங்கள் பிரிவுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் கல்பனா, தாசில்தார் வசந்தி, காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் பொன்.ஜெயராமன், கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன.தொடர்ந்து அளவீடு செய்த இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்லை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் நட்டு அப்பணியை தொடக்கி வைத்தார்.

திருமால்பட்டு கிராமத்தில் மட்டும் 70 எல்லைக் கற்கள் நடும் பணி நடந்து வருவாகவும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும், செயற்கைக்கோள் உதவியுடன் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நடும் பணிகள் தொடரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: