தைப்பூசத்தையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

தர்மபுரி, ஜன.19: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வெளியே நின்று வழிபட்டு சென்றனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஆகம விதிகளின்படி கோயில் வளாகத்திலேயே சுவாமி பல்வேறு வாகனங்களில் உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்கார சேவை நடந்தது. பின்னர் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, தைப்பூசத் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் வெளியே நின்று வழிபட்டனர்.

தொடர்ந்து நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் மற்றும் பொன் மயில் வாகனத்தில் சுவாமி உற்சவம், இன்று (19ம் தேதி) விநாயகர் தேரோட்டம், யானை வாகன உற்சவம் நடக்கிறது. நாளை (20ம் தேதி) சிவ சுப்பிரமணியசுவாமி தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஆகம விதிகள் படி கோவில் வளாகத்திலேயே எளிமையான முறையில் தேரோட்டம் நடத்த, விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி காலை 7 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோயில், எஸ்வி ரோடு சுப்ரமணிய சுவாமி கோயில், உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Related Stories: