கொரோனா பரவலை தடுக்க ஊர் திருவிழா நடத்த அதிகாரிகள் மறுப்பு: கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் ஊர் திருவிழா நடத்த அனுமதிக்காததால், கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி  திருவிழா நடப்பது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு காணும் பொங்கல் தினத்தில் முழு ஊரடங்கு என்பதால் நாளை (20ம் தேதி) திருவிழாவை நடத்த கடந்த 2 நாட்களுக்கு முன் பாலுசெட்டி கவல் நிலையத்தில் அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதில், திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுத்துள்ளது. இதைதொடர்ந்து, திருவிழாவை நடத்த பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்தவேளையில், நேற்று மாலை அங்கு சென்ற போலீசார் மற்றும் வருவாய் துறையினர், விழா நடத்த அனுமதியில்லை என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், கடந்த ஆண்டு இதே ஊரடங்கின்போது அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அனுமதி மறுப்பது ஏன் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து டிஎஸ்பி ஜூலியர் சீசர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென சாலையில் பொதுமக்கள் திரண்டதால், கிராமம் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: