×

தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பெண் மேயர்: மாவட்டத்தில் அதிகரிக்கும் பெண்களின் ஆளுமை

காஞ்சிபுரம்: தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில், உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி மாவட்ட நிர்வாகங்கள் முதற்கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதைதொடர்ந்து, வார்டு மறு சீரமைப்பு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய தலைமை பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி, டிஐஜி சத்திய பிரியா,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் திட்ட அலுவலர் சற்குணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமி, காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராணி உள்பட பெரும்பாலான அதிகாரிகள் பெண்களாக உள்ளனர். இந்தவேளையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம் உள்பட பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெண்களின் ஆளுமை அதிகமாகவே உள்ளது.
மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 2, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 2 வார்டுகள், மகளிருக்கு 24, பொது பிரிவினருக்கு 23 வார்டுகளும், உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 1, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 1, மகளிருக்கு 8, பொது பிரிவினருக்கு 8 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வாலாஜாபாத் பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 3, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 2, மகளிருக்கு 5, பொது பிரிவினருக்கு 5 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 2, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 1, மகளிருக்கு 6,பொது பிரிவினருக்கு 6 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags : Kanchipuram Corporation ,
× RELATED காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவ, மாணவிகள் காயம்