×

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு விலக்கிற்காக மீண்டும் குரல் கொடுப்போம் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

அருப்புக்கோட்டை, ஜன. 19: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் அருப்புக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: அருப்புக்கோட்டையில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். இதனால், 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை இங்கு அமைக்க வேண்டும் என மத்திய தொழிலாளர்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பாராளுமன்றத்திலும் மதுரை, திருச்சியில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தியுள்ளேன். இந்தியாவின் பொருளாதாரம் சீரழியவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காரணம். நான்கு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு பயன்தராத பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியையும் தரவில்லை. தமிழகத்தில் 10 திட்டங்களுக்கு 4 ஆயிரத்தி 600 கோடி ரூபாய் தேவை. ஆனால், ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி புதிய ரயில்பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க தொடர்ந்து பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகிறேன்.

குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார், மருதுபாண்டியர் ஆகியோரை இவர்கள் யார் என அதிகாரிகள் கேட்டுள்ளனர். இது குறித்து பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தேவை. நீட்தேர்வு விலக்குக்கு நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் எழுப்புவோம். தமிழக கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதிதான். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழக மண்ணில் எடுபடாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. நெசவாளர்களுக்காக நூலை ஏற்றுமதி செய்வதை தவிர்த்து விலை ஏற்றத்தை குறைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார். அப்போது நகர காங்கிரஸ் தலைவர் லெட்சுமணன், மாவட்ட செயலாளர்கள் கனகவேல், சண்முகவேல், மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் ஜோதிமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Virudhunagar ,Manikkam Tagore ,
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...