அரிசிக்கடையில் தீப்பிடித்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

தேவதானப்பட்டி, ஜன. 19: தேவதானப்பட்டியில் அரிசிக்கடையில் தீப்பிடித்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தேவதானப்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகே அரிசிக்கடை நடத்தி வருபவர் சவுந்திரபாண்டியன் (45). இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வியாபாரத்தை முடித்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை இவரது கடைக்குள் தீப்பிடித்து எரிந்துள்ளது. கடைக்குள் இருந்து வரும் புகையை பார்த்து அக்கம்பக்கத்தினர் சவுந்திரபாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், கடைக்கு வந்து பார்த்தபோது கடை உள்பகுதியில் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் வந்த பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தேவதானப்பட்டி போலீஸ் எஸ்.ஐ.,இத்ரீஸ்கான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அரிசி, மாட்டுத்தீவனங்கள் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து கடை உரிமையாளர் சவுந்திரபாண்டியன் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்திற்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.

Related Stories: