முன்விரோதம் காரணமாக வீடுகளை சூறையாடிய கும்பல் இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது வழக்கு

புதுச்சேரி, ஜன. 19:  புதுச்சேரி கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலர் (42). இவரது மகன் எல்லாடை அருண் (20). காணும் பொங்கலன்று இவர், அதே பகுதியில் வசிக்கும் சூர்யா என்ற கேப் சூர்யா (22) என்பவரின் வீட்டிற்கு சென்று முன்விரோதம் காரணமாக அவரை திட்டிவிட்டு வீடு திரும்பியதாக தெரிகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த சூர்யா, தனது கூட்டாளிகளான ஐஸ் புஷ்பராஜ், பூரி, ரைஸ் அகி, பிச்சை கில்லி பிரதாப், லட்டு, நாகராஜ் உள்ளிட்ட சிலருடன் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பலாக மலர் வீட்டுக்கு வந்தனர்.அங்கு எல்லாடை அருண் இல்லாத நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்தவர்களை ஆபாசமாக திட்டி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டது. வெளியே சென்று வீடு திரும்பிய எல்லாடை அருண், மேற்கண்ட சம்பவத்தை கேள்விப்படவே கோபமடைந்தார்.

உடனே தனது நண்பர்களான தர்மா, மன்னா வினோத், பாலு, லோகு என்ற லோகேஷ், பிரசாந்த் உள்ளிட்டோருடன் ஆயுதங்களுடன் கருவடிக்குப்பம் எடையன்சாவடி ேராட்டில் வசிக்கும் சூர்யாவின் நண்பர்களான மிலிட்ரி பிரசாத் மற்றும் ஜெகன் ஆகியோரின் வீட்டிற்கு சென்று வீடுகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுதொடர்பாக மலர் கொடுத்த புகாரின்பேரில் கேப் சூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மிலிட்ரி பிரசாத்தின் தாயார் ஜெயலட்சுமி(50) கொடுத்த புகாரின் அடிப்படையில் எல்லாடை அருண் உள்பட 6 பேர் கும்பல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் சிக்கியுள்ளதால் தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளில் சிலர் மீது அடிதடி, தகராறு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

Related Stories: