தைப்பூச விழாவில் குளிர்பான பாட்டில்களால் அலங்கரிக்கப்பட்ட முருகர் பக்தர்கள் செடல் ஊர்வலம்

வில்லியனூர், ஜன. 19: வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் நிமிலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் தைப்பூச திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து அலகு குத்தி, தேர், டிராக்டர், மினி லாரி, பொக்லைன் இயந்திரம் போன்றவற்றை செடல் இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அப்போது கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் செயற்கை பானங்களை தவிர்த்து இயற்கை பானங்களை அருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுவாமிக்கு குளிர்பான பாட்டில்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இயற்கையை மதிப்போம் என்று வாசகம் பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதனை வலியுறுத்தி அலங்கரிக்கப்பட்ட சாமிக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக செடல் இழுத்து வந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்கள், பெண்கள் என வாகனங்களில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றனர். இதனை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முருகன் சிலையை மொபட்டில் அமர வைத்து வாகனத்தை ஓட்டுவது போன்று அலங்கரித்து செடல் இழுத்தனர். இச்செடல் உற்சவம் கோயிலில் புறப்பட்டு மந்தைவெளி, சக்கரை விநாயகர் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, மேட்டுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து மதியம் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: