திருப்பூர் மருத்துவ கல்லூரியில் இன்று கவுன்சிலிங்

திருப்பூர், ஜன.19: தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பூர் மருத்துவக்கல்லூரியில் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டன.  திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கான உதவி மையம், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. நடப்பாண்டு, ஜனவரி 7 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. பலரும் விண்ணப்பித்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் 19ம் தேதி (இன்று) இணையதள வாயிலாக (www.ncc.nic.in) துவங்குகிறது. மாணவர்கள், வரும் 24ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும். 20 முதல் 24ம் தேதி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.

அதற்கு அடுத்த இருநாட்கள் 25, 26ம் தேதிகளில் சரிபார்ப்பு பணி நடைபெறும். 27, 28ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மறுநாள் (29ம் தேதி) இட ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்படும். ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை இட ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.  2ம் சுற்று கவுன்சிலிங் பிப்ரவரி 9ம் தேதி, 3ம் மற்றும் 4ம் சுற்று முறையே மார்ச் 2 மற்றும் மார்ச் 21ல் நடைபெறும்.

இளநிலை, முதுநிலை, அகில இந்திய கவுன்சிலிங் முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் மாநில அரசு இடங்களுக்கான கவுன்சிலிங் துவங்கவுள்ளது என திருப்பூர் மருத்துவக்கல்லூரி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: