மருத்துவக் கல்லூரி மாணவிகளின் விடுதியாக ஊட்டி ஹை ஆல்டிடியூட் சென்டர் மாற்றம்

ஊட்டி, ஜன. 19: ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் முடியாத நிலையில், தற்காலிகமாக மாணவிகளின் விடுதியாக ஹை ஆல்டிடியூட் சென்டர் மாற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் தற்போது புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ரூ.461 கோடி மதிப்பில் ஊட்டி அருகேயுள்ள எச்பிஎப்., பகுதியில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் விடுதிகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. 50 சதவீத்திற்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், கடந்த வாரம் இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். எனினும், வகுப்பறைகள் மற்றும் விடுதிகள் ஆகியவைகளின் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நிலையில், தற்காலிகமாக வகுப்புகள் நடத்த ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வகுப்புகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மாணவிகள் தங்குவதற்கான கட்டிடங்கள் இன்னும் தயார் ஆகாத நிலையில், தற்காலிகமாக ஊட்டியில் உள்ள ஹை ஆல்டிடியூட் சென்டர் மாணவிகளின் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கல்லூரி மற்றும் விடுதிகள் கட்டுமான பணிகள் முடியும் வரை, மாணவிகள் இந்த மையத்தில் தங்கி பயில வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: