கோவை அருகே தொட்டராயர் சுவாமி கோயிலில் சலங்கை எருதுகளுக்கு பாதபூஜை

 தொண்டாமுத்தூர், ஜன.19: கோவை அருகே தொம்புலி பாளையம் தொட்டராயர் சுவாமி கோயிலில் மாட்டுப்பொங்கலன்று சலங்கை எருதுகள் வரவழைக்கப்பட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து எருதுகளுக்கு மாலை, பட்டு, வஸ்திரங்கள், தவிடு, பருத்தி கொட்டை புண்ணாக்கு, கரும்பு பயிர்கள் போன்றவற்றை வழங்கி பாதபூஜை செய்தனர். தொடர்ந்து நாதஸ்வரம் தாரை தப்பட்டை முழங்க சலங்கை எழுதுகள் ஒவ்வொரு கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. அங்கு பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாதே கவுண்டன் புதூர், கள்ளிப்பாளையம், ஆலாந்துறை புதூர், ஹை ஸ்கூல் புதூர், ஜாகீர் நாயக்கன் பாளையம், சப்பானி மடை ஆகிய பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கப்பட்டது.

இது குறித்து ஜாகீர் நாயக்கன் பாளையம் காளிகாம்பாள் சித்தர் பீடம் நித்யஸ்ரீ பத்ரப்ப சுவாமிகள் கூறுகையில்  , ‘‘தொட்டராயர் சுவாமி  கோயிலில் 200 ஆண்டுக்கு மேலாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. காப்பு கட்டுதல், பட்டி பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய தினங்களில் பசுக்கள் ஈன்ற கன்று குட்டியை கோயிலுக்கு தானமாக வழங்குவது வழக்கம். இந்த சலங்கை எருதுகளை வருடம்தோறும் பட்டிப்பொங்கல் அன்று வரவழைக்கப்பட்டு கிராமங்கள்தோறும் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து விருந்து உண்டு திரும்புவது வழக்கமாக உள்ளது. மழை வேண்டி, அமைதி செல்வவளம், திருமணம் குழந்தை செல்வம் பெறவேண்டி இந்த பாத பூஜை நடைபெற்றது’’ என்றார்.

Related Stories: